வினையாலணையும் பெயர் | vinayalanayum peyar |
வினையாலணையும் பெயர் :
ஒரு வினைமுற்று, பெயர்ச் சொல்லின் அர்த்தந் தந்து பெயர்ச் சொல்லாகி நிற்பதுமுண்டு. அச்சந்தர்ப்பத்தில் அச்சொல் வினையாலணையும் பெயர் எனப்படும். அடித்தார் என்னும் வினைமுற்று “அடித்தாரைச் சொல்லி அழு” எனுமிடத்தில் பெயராக அர்த்தப் பட்டு ஐ என்ற வேற்றுமையுருபேற்றுச் செயப்படுபொருளுணர்த்திற்று. இவ்வாறே நல்லாரை, பிறந்தார்க்கு, கற்றாரே, அரியானை முதலியனவும் வினையாலணையும் பெயர்களாகும்.
ஆண்பாற் பெயரில் அஃறிணைப் பொருள்கள்:
ஆனைவிழுந்தான், பரவிப்பாய்ந்தான், இங்காலான், குறிகாட்டுவான், ஒட்டுசுட்டான், ஊரியான், கட்டைப் பறித்தான், பன்றி விரித்தான் ஆகிய இடப்பெயர்களும், மொழிமுறித்தான் (காய்ச்சல்) கூப்பிடுவான் (வாந்திபேதி) முதலிய பிணிப் பெயர்களும், கூரன், நரம்பன், (புகையிலை மொட்டைக் கறுப்பன் (நெல்) முதலிய பயிர்ப் பெயர்களும் ஒலியன், உருபன் முதலிய மொழிப் பெயர்களுமாகிய ஆண்பால் விகுதி கொண்ட பெயர்களால் தமிழில் ௮ஃறிணப் பொருட்கள் சுட்டப்படுவதும் மரபாக உள்ளது.